தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த கொலை சம்பவங்கள் 23 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ஜாதிரீதியான கொலை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன், ‘தென்காசி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 5 கொலை வழக்குகளில் 15 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதில் ஒரு கொலை வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு 37 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2024-ம் ஆண்டில் 30 கொலை வழக்குகள் பதிவானது. கொலை சம்பவங்கள் 23 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கொலை வழக்குகளில் 83 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 19 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜாதிரீதியான கொலை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 8 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு காய வழக்குகள் 18 சதவீதம் குறைந்துள்ளது. கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
» தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: வைகோ கோரிக்கை
» மாநகராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு: தினகரன் கோரிக்கை
திருட்டு வழக்கில் 91 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக 582 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 71 லட்சத்து 92 ஆயிரத்து 515 மதிப்பிலான திருட்டு போன சொத்துகள் மீட்கப்பட்டன. இதில் தொடர்புடைய 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான 2 குற்ற வழக்குகளில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு 249 பேர் கைது செய்யப்பட்டு, 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 29 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குட்கா வழக்குகளில் 501 பேர் கைது செய்யப்பட்டு 4540 கிலோ குட்கா, 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் திருட்டு தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டு, 87 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு சாலை விபத்துகள் 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 87 பேர் குணடர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள், பிற சமூகத்தினரை இழிபுவடுத்தும் விதமாக வன்மத்தை தூண்டியவர்கள் என 31 பேர் கைது செய்யப்பட்டனர்’ என்று தெரிவித்தார்