விருதுநகர்: போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது

By அ.கோபால கிருஷ்ணன்

விருதுநகர்: விருதுநகர் கஸ்டம்ஸ் அதிகாரி என கூறி லாட்ஜில் அறை எடுத்து தங்கி விட்டு, வாடகை பணம் தராமல் மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள ஜீவா லாட்ஜில் அனிஸ்கனி (29) என்பவர் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இங்கு கோயம்புத்தூர் சின்னதாடகம் பகுதியைச் சேர்ந்த ராமு (42) என்பவர் கஸ்டம்ஸ் அதிகாரி எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்து லாட்ஜில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.

ஒரு வாரம் தங்கிய ராமு வாடகை பணம் தராமல் இருந்துள்ளார். வாடகை பணத்தை கேட்ட அனிஸ்கனியை அரசு அதிகாரியிடம் பணம் கேட்பாயா எனக்கூறி மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

இது குறித்து அனிஸ்கனி விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ராமு போலி அடையாள அட்டையை உருவாக்கி அரசு அதிகாரி என கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ராமுவை கைது செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE