2ம் மனைவி சமைத்த உணவை சாப்பிடாத முதல் மனைவிக்கு கத்திக் குத்து: கணவன் கைது

By KU BUREAU

சென்னை: அரும்பாக்கம் பகுதியில் தனது முதல் மனைவியை கத்தியால் தாக்கிய கணவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, அரும்பாக்கம், பாஞ்சலி அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் திலிப் சிங்கின் மனைவி பார்வதி (45) தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் திலிப் சிங் இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து நேபாளத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திலிப் சிங் தனது 2வது மனைவியுடன் பார்வதி வீட்டில் தனி, தனி அறையில் வசித்து வந்துள்ளனர்.

இதனால் பார்வதிக்கும் அவரது கணவர் திலிப் சிங்கிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (02.01.2025) அதிகாலை திலிப் சிங் 2வது மனைவி தயார் செய்த சாப்பாட்டை பார்வதியிடம் கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். பார்வதி சாப்பிட மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திலிப் சிங், பார்வதியை கல் மற்றும் கத்தியால் தாக்கி உள்ளார். தாக்குதலில் காயமடைந்த பார்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அரும்பாக்கம் காவல் நிலை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திலிப் சிங்கை (50) கைது செய்தனர். அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கல் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE