ராஜபாளையம் அதிர்ச்சி: துணிக்கடையில் எஸ்.ஐ மனைவி மீது மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு 

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் தென்றல் நகரில் துணிக்கடைக்குள் புகுந்து எஸ்.ஐ மனைவி மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் - செண்பகத்தோப்பு சாலையில் தென்றல் நகரில் ஒன்றிய கவுன்சிலர் வள்ளிமயில் என்பவர் விஸ்வம் டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை மற்றும் நைட்டி தைக்கும் கடை நடத்தி வருகிறார். இங்கு வள்ளிமயிலின் தங்கை முத்துமாரி வேலை பார்த்து வருகிறார். முத்துமாரியின் கணவர் சுரேஷ் ராஜபாளையம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

தினசரி காலையில் வள்ளிமயில் கடையை திறக்கும் நிலையில், இன்று காலை 10 மணி அளவில் முத்துமாரி கடையை திறந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், மிளகாய் பொடியைத் தூவி, முத்துமாரி அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். முத்துமாரி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் மர்ம நபர் அவரை கீழே தள்ளிவிட்டு பாதி செயினை அறுத்துச் சென்றார்.

முத்துமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் பைக்கில் தப்பிச் சென்றார். சம்பவ இடத்தில் டிஎஸ்பி பிரீத்தி நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார். ராஜபாளையம் வடக்கு போலீஸார், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ராஜபாளையத்தில் பட்டபகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE