13 வயது சிறுமிக்கு வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை போக்சோ சிறப்பு நீதி​மன்றம் தீர்ப்பு

By KU BUREAU

சென்னை: சென்னையில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு சென்னை பிராட்வே பகுதியில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய 13 வயது மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் அவரது தம்பியை கொலை செய்து விடுவதாக மாணவியை மிரட்டியுள்ளார். இதுபோல பலமுறை அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவிக்கவே, தாயார் அளித்த புகாரின்பேரில் பூக்கடை அனைத்து மகளிர் போலீஸார் சையது இப்ராஹிம் மீது போக்சோ சட்டத்தின்கீழ் கடந்த 2023 டிசம்பரில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பாக நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த சையது இப்ராஹிமுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அபராதத்தை பாதிக்கப்பட்ட மாணவி்க்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தமிழக அரசும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE