அம்பத்தூரில் ரவுடி கொலை - 6 இளைஞர்கள் கைது 

By இரா.நாகராஜன்

ஆவடி: அம்பத்தூரில் ரவுடியை கொலை செய்தது தொடர்பாக 6 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், மாடம்பாக்கம், சீதாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நவீன் (24). ரவுடியான இவர் ஏற்கனவே வில்லிவாக்கம் பகுதியில் வசித்துவந்தார். நவீன் மீது வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லையில் நடந்த, 3 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், டிசம்பர் 30-ம் தேதி நவீன் வில்லிவாக்கம் பகுதியில் இருந்து, மாடம்பாக்கம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர் பகுதியில் நவீன் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், நவீனை வழி மறித்து, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நவீனை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நவீன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்த அம்பத்தூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், ''கடந்த 2021-ம் ஆண்டு வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த அலெக்ஸ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக நவீனை, 6 பேர் கும்பல் கொலை செய்தது'' தெரியவந்தது.

ஆகவே, நவீன் கொலை வழக்கு தொடர்பாக சென்னை- அமைந்தகரையைச் சேர்ந்த அசோக்குமார்(24), வில்லிவாக்கம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (21), பாடியநல்லூரை சேர்ந்த ஆல்பர்ட் (23), ஐசிஎப், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விஜய் என்ற சாலமன் (21), டி.பி.சத்திரம், 27-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த இமான் (20), புளியந்தோப்பு, மோதிலால் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் என்ற ஏழுமலை (21) ஆகிய 6 பேரை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE