மதுரையில் வேலை வாங்கித்தருவதாக இன்ஜினீயரிடம் ரூ.40 லட்சம் மோசடி: ஒருவர் கைது

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் கூட்டுறவு துறையில் வேலை வாங்கித்தருவதாக இன்ஜினீயரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் ஜெயகுருநாதன் (41). வெளிநாடுகளில் இன்ஜினீயராக வேலை செய்துள்ளார். பிறகு 2022-ல் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.

இந்நிலையில், கருப்பாயூரணி பகுதியில் சொந்தமாக மனமகிழ் மன்றம் திறக்க ஜெயகுருநாதன் முடிவெடுத்தார். இதற்கான அனுமதியை பெறுவது தொடர்பாக புருஷோத்தமன் என்பவரை அணுகியுள்ளார். ஆனால், அவர் கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயகுருநாதன் தன்னிடம் இருந்த ரூ.10 லட்சம் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரிடம் இருந்து ரூ.30 லட்சம் என ரூ.40 லட்சத்தை கடந்த ஜனவரியில் புருஷோத்தமன், அவரது மனைவி முத்துலட்சுமியிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் காரைக்குடியைச் சேர்ந்த பிரகாஷ் ஜெயசந்திரன் என்பவரிடம் பணி நியமன ஆணையை பெறுமாறு புருஷோத்தமன் கூறியுள்ளார். இதன்பின் ஜெயகுருநாதன் அவரை சந்தித்து பணிக்கான ஆணையை பெற்றுள்ளார். அது போலி ஆணை என்பது தெரிந்தது. ரூ.40 லட்சத்தை திருப்பிக் கேட்டபோது, பணத்தை தராமல் ஏமாற்றியதாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் ஜெயகுருநாதன் புகார் அளித்தார். புருஷோத்தமன் அவரது மனைவி முத்துலட்சுமி, பிரகாஷ் ஜெயசந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஏற்கெனவே தல்லாகுளம் காவல் நிலைய வழக்கு ஒன்றில் கைது செய்து மேலூர் கிளையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புருஷோத்தமன் , மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE