உதகை: வெலிங்டனில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் வர்த்தக மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த இருவரை சைபர்கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் சைபர் குற்ற காவல் நிலையத்தில் கடந்த 03.08.2024-ம் தேதி வெலிங்டன் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனது சேமிப்பு பணம் ரூ.45 லட்சத்தை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்தது தொடர்பாக புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டு, புகார்தாரரின் வங்கி பரிவர்த்தனை அறிக்கையை பெற்று, புகார்தாரர் பலமுறை முதலீடு செய்த வங்கி எண்ணை கண்டுபிடித்து அந்த வங்கி எண்ணிற்கான உரிமதாரரை பற்றிய விவரங்களை சேகரிக்கப்பட்டது.
அந்த சம்மந்தப்பட்ட வங்கி கணக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா என்ற பகுதியை சேர்ந்த ஷைலேஸ் குப்தா(56), ருஸ்தம் அலி (37) ஆகியோருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா அறிவுரையின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செளந்திர ராஜன் அவர்களின் மேற்பார்வையில் சைபர் குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரவீனா தலைமையில் தனிப்படையினர் மேற்கு வங்க மாநிலம் சென்று, மேற்படி எதிரிகளை 23ம் தேதி கைது செய்து, 27ம் தேதி நீலகிரி மாவட்டம் அழைத்து வந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா. கூறியதாவது: பொதுமக்கள் இதுபோன்று போலியாக இருக்கும் இணையதளங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளில் ஏதேனும் வங்கி மற்றும் தங்களுடைய சுய விவரங்களை பகிர வேண்டாம்.
» நவீனமயமாகும் இந்திய நெசவுத்துறை: 3.5 ஆண்டுகளில் ரூ. 18,500 கோடிக்கு இயந்திரங்கள் இறக்குமதி!
» மறைமலை நகரில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு அமைதி ஊர்வலம்
வெளி மாநில காவல்துறையினர் பேசுவதாக பொதுமக்களின் வாட்ஸப் எண்ணுக்கு வீடியோ அழைப்பில் வந்து இணையவழி கைது செய்திருப்பதாக கூறி விடுவிக்க வேண்மெனில் அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி கூறினால் பொதுமக்கள் பயந்து பணம் கொடுக்க வேண்டாம். அது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது போன்று அழைப்புகள் வரும் பட்சத்தில் சைபர் குற்ற கட்டணமில்லா உதவி எண் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.