‘இறைவனிடம் செல்கிறோம்’ - திருவண்ணாமலையில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் தற்கொலை

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள பண்ணை வீட்டில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் சூரியலிங்கம் அருகே உள்ள பண்ணை வீடு எனும் தங்கும் விடுதியில், சென்னை வியாசர்பாடியில் வசிப்பதாகவும், குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக கூறி மகா கால வியாசர்(43) என்பவர் நேற்று (டிசம்பர் 27-ம் தேதி) பதிவு செய்துள்ளார்.

பின்னர் அவருடன் ருக்மணி பிரியா(45) என்ற பெண்ணும், ஜலந்தரி(18) என்ற சிறுமியும், முகுந்த் ஆகாஷ்(15) என்ற சிறுவனும் பண்ணை வீட்டில் தங்கி உள்ளனர். இவர்கள் 4 பேரும், இன்று (டிசம்பர் 28-ம் தேதி) முற்பகல் வரை வெளியே வரவில்லை. மகா கால வியாசர் பதிவு செய்தபோது தெரிவித்திருந்த கைபேசி எண்ணை பண்ணை வீடு ஊழியர்கள் தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை.

இதனால் சந்தேமடைந்த அவர்கள், கதவை நீண்ட நேரம் தட்டியபோது திறக்கப்படவில்லை. பின்னர், திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியாக பார்த்தபோது 4 பேர் வாயிலும் நுரை தள்ளிய நிலையில் அசைவற்று கிடந்தனர். ஊழியர்கள் தெரிவித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 4 பேரும் உயிரிழந்த நிலையில் இருந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பண்ணை வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, கடிதம் ஒன்றும், அறையில் இருந்த கைபேசிகளை கைப்பற்றினர். இதில், ஒரு கைபேசியில், தற்கொலைக்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. இதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருன்றனர்.

ஆன்மிகத்தின் மீதான அதீத பற்றால், 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். அந்தக் கடிதத்தில் `முக்தி அடைகின்றோம். இறைவனை நோக்கிச் செல்கிறோம்’ என்று எழுதப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்க முன்வராத காவல்துறையினர், 4 பேர் மரணத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் என்கின்றனர்.

சென்னை வியாசர்பாடி முகவரியை தங்கும் விடுதியில் பதிவு செய்து இருந்தாலும், அந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதார் அட்டையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என உள்ளது. திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE