சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர் மண் வாரித் தூற்றிய காணொளியை பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட இளைஞர் பிரதீஷை உடனடியாக விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த, முதலமைச்சர் ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர், தனது கோபத்தை வெளிக்காட்டும் விதமாக, செருப்பை எறிந்து, மண் வாரித் தூற்றிய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியது.
பெண்கள், குழந்தைகள், வயது முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது, பொதுமக்களுக்குக் கட்டுக்கடங்காத கோபம் இருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது. நியாயப்படி, முதலமைச்சர் தனது ஆட்சியைச் சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து, காணொளியைத் தனது சமூக ஊடகத்தில் பதிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீஷ் என்பவரைக் கைது செய்திருப்பதோடு, அந்த மூதாட்டியையும் கைது செய்யத் தேடி வருகின்றனர்.
வழக்குத் தொடுத்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, திருமதி கனிமொழி அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினருக்காக, காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்யப் போன கேவலமான வரலாறு கொண்டவர். உங்கள் ஆட்சியில், பாலியல் பலாத்காரம் செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய வெட்கமாக இல்லையா?
» பாமகவில் வெடித்தது பூகம்பம்: மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி மோதல்; யார் அந்த முகுந்தன்?
» விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு; காரணம் என்ன?
கைது செய்யப்பட்ட இளைஞர் பிரதீஷை உடனடியாக, விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்