ஆளுங்கட்சிக்காரர்கள் எனக்கூறி குடிபோதையில் இளைஞர்கள் மிரட்டல்: கடற்கரைக்கு வந்த பெண்கள் மீது தாக்குதல்

By KU BUREAU

கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில், கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்த பெண்கள் மீது குடிபோதையில் வந்த 4 பேர் அத்துமீறி நடந்துள்ளனர். இதை தடுக்க முயன்றபோது, தாங்கள் ஆளுங்கட்சிக்காரர்கள் எனக் கூறி மிரட்டியுள்ளனர்.

குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து. கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பவானி. இவர், குறிஞ்சிப்பாடி நகர பாமக மகளிரணி தலைவராக உள்ளார். கடந்த 24-ம் தேதி மாலை, பவானி, தனது கணவர் முத்து, சிதம்பரத்தைச் சேர்ந்த தனது அண்ணன் சத்தியமூர்த்தி, அண்ணி ஐஸ்வர்யா, உறவினரான திருநங்கை யாழினி, இரு உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் மற்றும் 3 குழந்தைகளுடன் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றனர்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த 4 இளைஞர்கள், இவர்களிடம் பிரச்சினை செய்து, ஆபாசமான வார்த்தைகளால் பேசி, எல்லை மீறி நடந்துள்ளனர். இதை பவானி தடுக்க முயன்றார். உடனே அவரையும் உடன் இருந்த ஐஸ்வர்யா, யாழினி ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்க, முத்து மற்றும் சத்தியமூர்த்தி உள் ளிட்ட ஆண்கள் அவர்களை தடுக்க முயன்றனர். அந்த போதை கும்பல் அவர்களையும் தாக்கியுள்ளது. உடன் இருந்த மற்றவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த போதை கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதற்கிடையே புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி பவானி இது பற்றி புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து தியாகவல்லி லெனின் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவேல் (24), தினேஷ் (21), சரவணன் (22), பிரவீன் (24) ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், தலைமறைவாக உள்ள பிரவீன் தவிர மற்ற 3 பேரையும் அன்றே கைது செய்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பவானி கூறும்போது, “சம்பவத்தன்று நாங்கள் பெரியகுப்பம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும்போது குடிபோதையில் வந்த 4 பேர் எங்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி, எங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர். ஒருகட்டத்தில், நாங்கள் பாமகவினர் என்று தெரிந்ததும் தாக்குதலை இன்னும் தீவிரமாக்கினர்.

எங்களைத் தாக்கியவர்களில் ஒருவன் ‘எங்கள் ஆட்சி நடக்கிறது; எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறி மிரட்டினான். எங்களுக்கு நடந்த கொடுமை வாட்ஸ்அப்பில் பரவ, அதை பார்த்துவிட்டு, பலர் என்னை அழைத்து கேட்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினர் மத்தியில் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று வேதனை தெரிவித்தார். பவானியின் கணவர் முத்து இதுபற்றி கூறும்போது, “இந்தச் சம்பவத்தில் 4 பேர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE