ராஜபாளையம்: மதுபோதையில் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

By அ.கோபாலகிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார்.

ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (53) என்பவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மலையடிபட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் மோகன்ராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு பணியில் இருந்த மோகன்ராஜ் மதுபோதையில் காவல் நிலையத்தில் பாரா பணியில் இருந்த பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதுகுறித்து, பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ மோகன்ராஜ் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றது, பணியின் போது மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக எஸ்எஸ்ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். மேலும் மோகன்ராஜ் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE