சென்னை: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரிபவர் மணிமாறன் (59). இவர், நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருடன் முந்திச் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறிது தூரத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் செல்லும்போது எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்த இளைஞர் தப்பினார். இதில், காயத்துடன் மயங்கி விழுந்த மணிமாறனை அப்பகுதி மக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது மயிலாப்பூர் டிமாண்டி தெருவில் வசிக்கும் மகின் கோஸ்கா (26)என்பது தெரிந்தது. ஆங்கிலோ இந்தியரான அவர் தண்டலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவரை போலீஸார் கைது செய்தனர்.