‘டாட்டூ’ சென்டர்கள் மருத்துவ விதிகளை பின்பற்றுகின்றனவா? - பழனியில் 35 பேருக்கு ரத்த பரிசோதனை

By KU BUREAU

பழநி: பழநியில் உள்ள ‘டாட்டூ’ சென்டர்கள் முறையான அனுமதி பெற்றும், மருத்துவ விதிகளை பின்பற்றியும் இயங்கி வருகின்றனவா என பக்தர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்களை நம்பி, பூஜைப் பொருட்கள், பூக்கள், விபூதி கடைகள், தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள் மற்றும் பஞ்சாமிர்த கடைகள் என பல்வேறு தொழில் நடத்துவோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

இவர்களை போல், ‘டாட்டூ’ எனப்படும் பச்சைக் குத்தும் தொழிலில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். பழநி திருஆவினன்குடி கோயில் சாலை, இடும்பன் இட்டேரி சாலை, பூங்கா சாலை, குளத்து சாலை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ‘டாட்டூ’ சென்டர்கள் இயங்கி வருகின்றன. தற்போது ஐயப்ப சீசன் என்பதால் சிலர் சாலையோரங்களில் தற்காலிக கடை அமைத்து பக்தர்களுக்கு பச்சை குத்துகின்றனர்.

பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் ஆதிகாலம் முதலே இருந்து வருகிறது. இன்றைய காலகட்டத்திலும் இளைஞர்கள் மத்தியில் டாட்டூ குத்திக் கொள்ள வேண்டும் என்ற மோகம் அதிகரித்து வருகிறது. பல்வேறு வண்ணங்களில் வித்தியாசமான டிசைன்களில் டாட்டூ குத்திக் கொள்வது பேஷனாகவும் மாறி விட்டது. பழநி வரும் பக்தர்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயர், உருவம் மற்றும் விரும்பிய வடிவங்களில் இதுபோன்ற டாட்டூ சென்டர்களில் கை, கால், விரல், கழுத்து, முதுகு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். இதற்கு கட்டணம் ரூ.300 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கின்றனர்.

ஆனால் இந்த டாட்டூ சென்டர்கள் முறையான அனுமதி பெற்றும், மருத்துவ விதிகளை பின்பற்றியும் இயங்குகின்றனவா? என பக்தர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணம், திருச்சியில் நாக்கை பிளவுப்படுத்தி பச்சை குத்திய டாட்டூ சென்டர் நடத்தி வரும் இளைஞரும், அவரிடம் டாட்டூ போட்டு கொண்டவரையும் போலீஸார் கைது செய்த சம்பவம்தான்.

எனவே, பழநியில் இயங்கி வரும் டாட்டூ சென்டர்களில் பச்சைக் குத்துவதற்கு பயன்படுத்தும் ஊசி, வண்ண மைகள் பாதுகாப்பானதுதானா என்பது குறித்தும், பச்சை குத்துபவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்களா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பழநி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் கூறியதாவது: “பழநியில் டாட்டூ போடுபவர்கள் மூலமாக, பக்தர்கள், பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க, பச்சைக் குத்தும் 35 பேருக்கு உடல்நல பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என அவர்களின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், டாட்டூ சென்டரை சுத்தமாக பராமரிக்கவும், பயிற்சிபெற்ற நபர் மூலமாகவே பச்சைக்குத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE