திருவண்ணாமலையில் முருகர், கிருஷ்ணர் சிலை பறிமுதல்: நவபாஷாண சிலையா? என வனத்துறை விசாரணை

By KU BUREAU

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கண்டியாங்குப்பத்தில் நவபாஷாண முருகர் சிலை மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை மத்திய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிலை கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வன விலங்கு குற்றப்பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில், திருவண்ணாமலை அடுத்த கண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள மரப்பட்டறையில் டிசம்பர் 22-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் முருகர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய 2 சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ராஜசேகர், வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.

இதில் முருகர் சிலையானது நவபாஷாணத்தில் செய்யப்பட்டது என்றும், இதன் சந்தை மதிப்பு ரூ.25 கோடி எனவும் கூறப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணர் சிலையானது யானை தந்தத்தால் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.30 லட்சமாகும். இதையடுத்து ராஜசேகர், வெங்கடேசன் மற்றும் 2 சுவாமி சிலைகளை திருவண்ணாமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாக கூறப்படும் முருகர் சிலையை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகே, இதன் உண்மை தன்மை தெரியவரும் என வனத்துறையினர் கூறுகின்றனர். மேலும் சுவாமி சிலைகள் கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்கள் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருப்பது தெரியவந்ததுள்ளது. அவர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE