ஜிஎஸ்டி வரியை குறைக்க ரூ.3.50 லட்சம் லஞ்சம்: மதுரையில் துணை ஆணையர் உள்பட மூவர் கைது!

By என்.சன்னாசி

மதுரை: மதுரையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பி.பி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவை அனுகியுள்ளார். அப் பிரிவில் துணை கமிஷனராக இருக்கும் சரவணக்குமார் (37) ஜிஎஸ்டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு ரூ.3.50 லட்சம் கையூட்டு லஞ்சமாக கேட்டுள்ளார்.

இந்தத் தொகையை கார்த்திக் கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும், துணை ஆணையர் கேட்ட தொகையை கொடுத்து சிபிஐயிடம் சிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் கார்த்திக் புகார் அளித்தார். சிபிஐ அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தலின் படியும் நேற்று இரவு பி.பி குளம் அலுவலகத்தில் வைத்து ரூ.3.50 லட்சத்தை அங்கு பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் அசோக் குமார் (45), ராஜ்பீர் ராணா (33) ஆகியோர்களிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ எஸ்பி கலைமணி இன்ஸ்பெக்டர் சரவணன் குழுவினர் கையும், களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் இந்த தொகையை துணை கமிஷனர் சரவணா குமாருக்காக அவர் வாங்க சொன்னது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வைத்து மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில் எஸ்டி பாக்கியியை குறைக்க லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப் பட்டது. இதன்பின் மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் பின் மூன்று பேரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE