தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்ற பாலு (35,) தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலின் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி மஞ்சுளா தேவி (30,) இவர்களுக்கு ஆதீஸ்வரன் (3), என்ற ஆண் குழந்தையும் தியா (6) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். பெண் குழந்தையான தியா தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று மாலை பள்ளி முடிந்து தியா தனது பள்ளிவேனில் ஆச்சியூர் வந்தார். அப்போது குழந்தையின் தாயார் மஞ்சுளா தேவி தனது மூன்று வயது மகன் ஆதிஸ்வரனை வீட்டு வாசல் படியில் அமர வைத்துவிட்டு வேனில் இருந்து இறங்கும் தனது மகளை அழைக்க வந்தார். அப்போது பள்ளி சென்று திரும்பிய தனது அக்காவை பார்க்கும் ஆவலில் பள்ளி வேனின் முன் குழந்தை வேகமாக ஓடி வந்துள்ளது. குழந்தை வந்ததை கவனிக்காமல் உடனே வேனை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனால் குழந்தையின் மேல் வேன் ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை ஆதிஸ்வரன் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தான். குழந்தையை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது அது சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது என தெரிய வந்தது. சிறுவனின் சடலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.