நாக்கை பிளந்து ‘டாட்டூ’ - திருச்சியில் 2 பேர் கைது: சிக்கியதன் பின்னணி

By KU BUREAU

திருச்சி: திருச்சியில் ‘பாடி மாடிஃபிகேஷன்’ என்ற பெயரில் நூதன முறையில் நாக்கை பிளந்து, உரிய அனுமதியின்றி அறுவை சிகிச்சை செய்து வந்த ‘டாட்டூ ஆர்ட்டிஸ்ட்’ உள்பட 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி சிந்தாமணி, வென்ஸி தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ‘பாடி மாடிஃபிகேஷன்’ என்ற பெயரில் நூதனமான முறையில் நாக்கை இரண்டாக கிழித்து நாக்குக்கு வண்ணம் தீட்டுவது, கண்களுக்குள் வண்ணம் தீட்டுவது போன்ற அறுவை சிகிச்சைகளை உரிய அனுமதியின்றி செய்து இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மும்பை சென்ற ஹரிஹரன் தன்னை இதுபோன்ற மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்டு, தன்னுடைய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ‘நீங்களும் இதுபோல செய்துகொள்ள வேண்டும் என்றால், என்னைத் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவரிடம் நாக்கை இரண்டாக கிழித்து வண்ணம் திட்டிக் கொள்ளும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதன்பின், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தது. மருத்துவக் கட்டுப்பாடுகளை மீறி இதுபோன்ற நூதனமான மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இது இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழி காட்டும் என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி டாட்டூ கடை நடத்தி வந்த ஹரிஹரன், அவரிடம் டாட்டூ குத்திக் கொண்ட அவரது நண்பர் திருவெறும்பூர் கூத்தைப்பார் 2-வது வடக்குத் தெருவைச் சேர்ந்த வி.ஜெயராமன் ஆகிய இருவர் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE