மதுரை: திருமணம் செய்வதாகக்கூறி தன்னிடம், பழகி ஏமாற்றியதாக கிறிஸ்துவ பாஸ்டர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகராட்சி பெண் ஊழியர் புகார் அளித்தார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (28). இவர், இன்று தனது வழக்கறிஞர் சுந்தர் என்பவருடன் மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: ‘எனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எனது பெற்றோர் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மணடலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்கிறேன். மதுரை முனிச்சாலை பாலரெங்கபுரம் பகுதியிலுள்ள யேசுவின் நற்செய்தி சபை கூட்டத்துக்கு சென்றபோது, அந்த சபையிலுள்ள பாதிரியார் ஜான்ராபர்ட் என்பவர் மகன் பாஸ்டர் டோனிராய்ஸ் என்பவருடன் குடும்ப ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து, என்னை திருமணம் செய்வதாகக் கூறி பழகியது எனக்கு தெரியவில்லை. இருவரும் கடந்த 4 ஆண்டாக கணவன், மனைவியாக வாழ்ந்தோம். எனக்கு குழந்தை ஒன்றும் பிறந்ததது. என்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தினேன். ஆனால், என்னை நம்ப வைத்து அவர் ஏமாற்றினார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி மதுரையில் ஜெயபாரத் ஹவுசிங் போர்டிலுள்ள டோனிராய்ஸ் வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த அவரது பெற்றோர் எனது மகனை தேடி வரக்கூடாது, மகன் வேலை பார்க்கும் சர்ச்சுக்கும் போகக்கூடாது என மிரட்டினர்.
தொடர்ந்து செல்போனிலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். மனைவி என்ற பெயரில் வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றும் என்னை சீரழித்தார். அவரது தேவைக்கென ரூ. 2 லட்சம் கடன் வாங்கி செலவு செய்தேன். டோனிராய்ஸ் மட்டுமின்றி அவரது பெற்றோரும் அவருக்கு உடந்தையாக இருந்து, எனக்கு எதிராக செயல்பட்டனர். டோனிராய்ஸ் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்,’ என்று அவர் கூறியுள்ளார்.
» கடந்த 3 ஆண்டுகளில் 7 இலட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு: அமைச்சர் பெருமிதம்
» நிவாரணம் கேட்டு போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை - திமுக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை