டிஎன்பிஎஸ்சியின் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் குளறுபடியா? - டிடிவி.தினகரன் கேள்வி

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் குளறுபடியா?. தேர்வர்களின் அரசுப் பணி கனவை சிதைக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கான தேர்வில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கு முறைப்படி விண்ணப்பித்த பல தேர்வர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வர்கள் தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் இயங்கி வந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், தற்போது தலைவர் நியமிக்கப்பட்ட பின்னரும் அதே குளறுபடிகள் தொடர்வது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, குளறுபடிகள் நிறைந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை ரத்து செய்துவிட்டு, முறையான அறிவிப்பை வெளியிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE