புதுவை: ஆன்லைனில் பொருட்கள் விற்பனை எனக்கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கஸ்டம்சில் பிடிபட்ட பொருட்கள் எனக் கூறி, பாதி விலைக்கு தருவதாக ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் தற்போது இணையவழியில் ஏமாற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நாள்தோறும் ஏராளமான புகார்கள் சைபர் கிரைமில் குவிகின்றன. தற்போது இணையத்திலும், வாட்ஸ்-அப், இன்ஸ்ட்ரா கிராம், ஃபேஸ்புக் மூலம் டிவி, பிரிட்ஜ், செல்போன், வாஷிங்மெஷின் படங்களை அனுப்பி அவை கஸ்டம்சில் பிடிப்பட்டதால் குறைந்த விலைக்கு தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். அதைப் பார்த்து பலர் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

மேலும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறியும் பணம் வாங்கி ஏமாற்றும் சம்பவமும் நடந்துள்ளதாக புதுச்சேரி சைபர் கிரைமில் புகார்கள் வந்தன. இந்நிலையில், இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் குழு தொடர்ந்து விசாரணை நடத்திய போது கஸ்டம்சில் பிடிப்பட்டதாக ஆன்லைனில் படங்களை பதிவேற்றி ஏமாற்றியதுடன் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும் சுமார் 20 பேர் வரை ஏமாற்றிய கோட்டக்குப்பம் அப்துல் ஷாகித்தை சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர். அவர் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE