கோவில்பட்டி: கோவில்பட்டியில் 10 வயது சிறுவன் மர்மமாக மரணமடைந்த சம்பவத்தில், நேற்று 2-வது நாளாக துப்பு துலங்கவில்லை. மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் நேற்று சோதனையிட்டனர். கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி.
இவர்களுக்கு மணிகண்டன், கருப்பசாமி (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். 5-ம் வகுப்பு படித்து வந்த கருப்பசாமி அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் பள்ளி செல்லாமல் இருந்துள்ளார். இதற்காக, சிறுவனுக்கு 1.5 பவுன் செயினும், கையில் ஒரு கிராம தங்க மோதிரமும் பெற்றோர் அணிவித்துள்ளனர்.
கடந்த 9-ம் தேதி காலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த கருப்பசாமி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காந்தி நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அவற்றில், எதிலும் கருப்பசாமி குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மறுநாள் (10-ம் தேதி) அதிகாலை அருகே உள்ள வீட்டின் மொட்டை மாடியில் மூர்ச்சையான நிலையில் கருப்பசாமி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை.
» சென்னை: அடையாறில் போதைப்பொருள் வைத்திருந்த அஸ்ஸாம் மாநில நபர் கைது
» திருப்பத்தூர் ஊராட்சி தலைவர் கைது: கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.
கருப்பசாமி வீட்டின் அருகே உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், சந்தேகப் படும்படி யான நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். தென்காசியில் இருந்து ஜியோ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சிறுவன் கருப்பசாமி உயிரிழந்து சுமார் 12 மணி நேரத்துக்கு மேலான நிலையில், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து கோக்கோ, திருநெல்வேலியில் இருந்து ரிக்கி ஆகிய மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், மோப்ப நாய்கள் கருப்பசாமி வீடு, அவர் இறந்து கிடந்த இடம் மற்றும் அதனை சுற்றி வந்து நின்றுவிட்டன.
இதையடுத்து, நேற்று மதியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அலெக்சா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அதுவும் கருப்பசாமி வீடு உள்ள பகுதியையே சுற்றி வந்தது. நேற்று 2-வது நாளாக எஸ்.பி. கோவில்பட்டியில் முகாமிட்டு விசாரணை துரிதப்படுத்தினார். ஆனாலும் எந்தவித முன்னேற் றமும் இல்லை.
இதற்கிடையே, கருப்பசாமி நகைக்காக கடத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது வீடு உள்ள பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கருப்பசாமியை கொலை செய்து, நகையை பறித்துச் சென்றனரா என பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சிறுவன் இறந்து 2 நாட்களாகியும் துப்பு துலங்காமல் உள்ளதால், அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. இதனால், பரபரப்பு நிலவுகிறது.