கோவை: திருமணம் செய்து கொள்வதாக இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெண்ணை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது திருமணத்துக்காக பெண் தேடி வந்தார்.
இதற்காக ஒரு மேட்ரிமேனியல் நிறுவனத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அப்போது அதே நிறுவனத்தில் மாப்பிள்ளை தேடி பதிவு செய்திருந்த ஒரு பெண் இவரிடம் அறிமுகமானார். வாட்ஸ் அப் மூலமாகவும், வீடியோ கால் மூலமாகவும் இருவரும் தொடர்ந்து பேசி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இச்சூழலில், அந்த பெண் தனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என இளைஞரிடம் கூறியுள்ளார். அவரும் அப்பெண் கூறியதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.7 லட்சத்து 12 ஆயிரம் வரை அனுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இருந்து அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்று பெண் தெரிவித்த முகவரியில் விசாரித்தபோது, அது போலியானது எனத் தெரியவந்தது.
» மோசமான வானிலை - சென்னையில் இன்று ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
» தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் இயக்குவதில் சிக்கலா? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் மேற்கண்ட மோசடி தொடர்பாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அப்பெண்ணின் செல்போன் எண், வங்கி கணக்கு எண் விவரங்களை வைத்து விசாரித்த போது, மோசடியில் ஈடுபட்டவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த பிரியா(32) எனத் தெரிய வந்தது. இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் கூறும்போது, ‘‘பிரியாவுக்கு முதல் திருமணமாகிகணவர் உயிரிழந்து விட்டார். 2-வது திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பின்னர், 3-வதாகவும், 4-வதாகவும் அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். மோசடியாக பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், திருமண மேட்ரிமோனி நிறுவனத்தில் போலி பெயர் விவரங்களை பதிவு செய்து, அதில் பதிவு செய்துள்ள இளைஞர்களிடம் பேசி பணம் வசூலித்துள்ளார். மேற்கண்ட புகார்தாரரிடம் ரூ.7.12 லட்சம் மட்டுமின்றி, ஈரோட்டைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.4 லட்சம் வரை பணத்தை வசூலித்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது’’ என்றனர்.