அரியலூர்: மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்

By பெ.பாரதி

அரியலூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் டிச.7ம் தேதி மினி பேருந்து ஓட்டுநர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 3 பேர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் இன்று (டிச.09) சரணடைந்தனர்.

அய்யம்பேட்டை அடுத்த பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா மணிகண்டன் (28). மினி பேருந்து ஓட்டுநரான இவர், அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 7ம் தேதி மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்த அய்யம்பேட்டை போலீஸார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், 7ம் தேதி இரவு அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த சந்தேகத்துக்குரிய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் அய்யம்பேட்டை காந்தி நகர் ஹேமதீபன் (19), பாரதிதாசன் நகர் கரண் (26), தஞ்சாவூர் கீழவாசல் கதிர்வேல் (25) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பதும், மினி பேருந்து ஓட்டுநர் சிவா மணிகண்டன் கொலை குற்றவாளிகளுக்கு வாகனம் வழங்கிய நபர்கள் என்பதும், 4 பேரும் குற்றவாளிகளின் நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் கொலை குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சிவா மணிகண்டனை வெட்டி கொலை செய்த அய்யம்பேட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சுந்தரேசன் (20), மதகடி பஜார் தெருவைச் சேர்ந்த பரமேஸ்வரன் (20), வெள்ளான் செட்டி தெருவைச் சேர்ந்த ராகுல் (18) ஆகிய 3 பேரும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகரன் முன்னிலையில் இன்று சரணடைந்தனர்.

இதையடுத்து 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதில் சுந்தரேசன் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE