கடலூர்: வேப்பூர் அருகே குடும்பப் பிரச்சினையில் தாய், தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும்( 24) இடையே 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதே போன்று நேற்று முன் தினம் இரவு தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து நேற்று காலை அன்பழகன், நித்யாவிடம் எதுவும் கூறாமல் வேலைக்கு கிளம்பிச் சென்றுள்ளாராம். இதில் மனமுடைந்த நித்யா நேற்று பிற்பகல், தனது மகன் அனிஷ்(5), மகள் கோபிகா(2 ) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு, மூன்று பேருமாக அங்கு உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் வேப்பூர் காவல்துறையிடம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்களுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நித்யா, அனிஷ், கோபிகா ஆகிய 3 உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
» தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம்: டிடிவி தினகரன் கண்டனம்
» மேகதாது அனைத்து திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்