தமிழகத்தில் மீண்டும் பாவரியா கொள்ளையர்களா? - ‘தீரன்’ பட காட்சிகள் போல் பல்லடம் சம்பவம்!

By ஆர்.ஷபிமுன்னா

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் படுகொலைகள், தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் இன்னும் முறையானத் துப்பு கிடைக்காமல் தமிழக போலீஸாரின் 14 தனிப்படைகளும் திணறும் சூழலில், சுமார் 14 வருடங்களுக்கு முன் தமிழகத்தின் கொள்ளையுடன் நடைபெற்ற கொலை சம்பவங்களின் குற்றவாளிகளும் கணக்கெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

இவற்றில் கிடைத்த குற்றவாளிகளில் முக்கியமானவர்கள் பாவரியா எனும் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த வட இந்தியர்களும் உள்ளனர். இதுபோல் தமிழ்நாட்டில் ஒருமுறை நடைபெற்ற கொலைகளுடனான தொடர் கொள்ளைகளில் பாவரியா குற்றவாளிகளின் பெயர் முதன்முறையாக அடிப்பட்டன. இவர்களை பிடிக்க அப்போதைய டிஐஜி ஜாங்கிட் நடத்திய தேடுதல் வேட்டை, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எனும் பெயரில் படமாகி பிரபலமானது.

ஜாங்கிட்டாலனக் கைதுகளுக்கு வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளும் முக்கியப் பங்காற்றி இருந்தனர். இந்நிலையில், அதே பாவரியா சமூகத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் களம் காணத் துவங்கி விட்டதாகத் தெரிகிறது. ஏனெனில், பல்லடம் கொலைகளில் கையாளப்பட்ட சில முறைகள் பாவரியா குற்றவாளிகளுக்கானது.

குறிப்பாக அவர்கள் ஒருவரை கொலை செய்ய கையில் கிடைக்கும் மரம் உள்ளிட்டவற்றை ஆயுதமாக்கி நடுமண்டைகளில் முழுசக்தியுடன் அடிப்பது உண்டு. இதுவும் தம் சாங்கியத்தின் அடிப்படையில் ஆறு முறை மட்டுமே

அடிப்பார்கள் என ஒரு கருத்து உண்டு. ராஜபுதனர்கள் உள்ளிட்ட அக்கால அரசர்களுக்கு போர்களிலும் உதவிய இவர்கள் இயற்கையிலேயே குரூரக் குணம் படைத்தவர்களாம்.

இந்த சமூகத்தின் கொள்ளையர்களை கச்சா பனியன்(வெறும் பனியன் அணிபவர்கள்), சர் தோட்(மண்டை உடைப்பு) என சில பெயர்கள் உண்டு. பாவரியாக்களின் கொள்ளைகளுக்கானத் துப்பு அவர்கள் குறி வைக்கும் சம்மந்தப்பட்டவர்களால் கிடைத்து விடுகிறது. சிலசமயம் தானாகவும் பாவரியா குற்றவாளிகள் தம் இரையை தாமகத் தேடிக் காண்பதும் வழக்கமே. இதற்காக நாட்பொழுதும் தெருவியாபாரிகளாகி தம் நடவடிக்கைகளுக்கு அடித்தளம் இடுகின்றனர்.

இதற்கு வசதியாக மழைக்காலம் அல்லது குளிர்காலம் நாட்களை தேர்வு செய்கின்றனர். இக்காலத்தில் தொடர் கொள்ளைகளை நடத்திவிட்டு சிறிய இடைவெளியில் தம் மாநிலங்களுக்கு தப்பி விடுவதும் பாவரியாக்களில் வழக்கம். சிறு,சிறு கூட்டங்களாக வசிக்கும் பாவரியாக்கள் நாடோடிகள் என்பதால் இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தாம் வாழ்ந்த ஒரு இடத்துக்கு மீண்டும் வர பல ஆண்டுகள் ஆகிறது.

ராஜஸ்தான், உ.பி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இவர்கள் அதிகம் வசிக்கின்றனர். குஜராத், டெல்லி, ம.பி., உத்தராகண்டிலும் பாவரியாக்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒரே பெயரில் அல்லாமல் பாப்ரி, பவுரியா, பவாரி, பாட்டி, நாரிபட் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். ராஜஸ்தானில் அழ்வர், தோல்பூர், பரத்பூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

உ.பி.யில் இவர்கள் மீரட், அலிகர், பாந்தா, ஆக்ரா, மெயின்புரி, முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர். ஆனால், தாம் எளிதில் சிக்கிவிடும் அபாயத்தை தவிர்க்க வட மாநிலங்களில் அதிகமாகக் கொள்ளையடிப்பதில்லை. இந்த பாவரியாக்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. எனினும், இவர்கள் இடையே உருவாகி தொடரும் குற்றவாளிகளில் மனம்திருந்தி விவசாயம் செய்து பிழைப்பவர்களும் உள்ளனர்.

பல்லடம் சம்பவத்தில் பாவரியா சமூகக் குற்றவாளிகளுக்கான சம்மந்தத்தை தமிழ்நாடு காவல்துறை ஆய்வு செய்து முதலில் உறுதிசெய்ய வேண்டும். இதன் பிறகு அவர்கள் வாழும் பகுதியிலுள்ள காவல் அதிகாரிகளான தமிழர்களைத் தொடர்பு கொண்டால், கூடுதல் தகவல்களுடன் கைதுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து வட மாநில காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஜாங்கிட் பணிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் விசாரணையில் சம்மந்தப்பட்டவர்களும், பணி ஆர்வத்திலும் சில அதிகாரிகள் எங்களிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஆர்வலர்களுக்கு பல்லடம் கொலைச் சம்பவம் பாவரியா குற்றவாளிகளால் செய்யப்பட்டிருக்கும் சந்தேகம் உள்ளது.

இதனால், நாம் பாவரியாக்களின் பழைய கைப்பேசி எண்களை எடுத்து விசாரித்ததில் அவை அனைத்தும் தற்போது இணைப்பில் இல்லை. எனினும், தமிழக காவல்துறை இந்த வழக்கில் எங்களிடம் உதவிக் கேட்டால் அதை செய்யத் தயாராக உள்ளோம்.’ எனத் தெரிவித்தனர்.

48 ஆதாயக் கொலைகள்

தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2023 வரை சுமார் 48 ஆதாயக் கொலைகள் நடந்ததாக ஒரு புகார் உள்ளது. இப்புகாருக்கு ஆதாரமாக பல்வேறு நகரங்களின் 10 வழக்குகள் பட்டியல் ஒன்று, ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிற்கு கிடைத்துள்ளது. இது எதிர்கட்சிகளால் தமிழக சட்டப்பேரவையிலும் புகாராக எழுப்ப முயன்று முடியாமல் போனது. இப்பட்டியலில் பத்து வழக்குகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

பத்து வழக்குகளிலும் உண்மைக் குற்றவாளிகள் கைதாகாமல், பெயரளவில் சிலர் கைதுசெய்யப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த 10 வழக்குகள், ராஜபாளையம், காங்கேயம், அருப்புக்கோட்டை, சென்னிமலை, வி.களத்தூர், மகாபலிபுரம், காளையார் கோயில், தேவக்கோட்டை, ஆத்தூர் ஆகிய இடங்களில் நடந்தேறி உள்ளன. 10 சம்பவங்களில் 16 பேர் பலியாகி இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதுவன்றி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா 3 மற்றும் ராசிபுரத்தில் 4 என 7 சம்பவங்கள் நடந்ததாகவும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளிலும் பாவரியாக்களுக்கு சம்மந்தம் இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

சிசிடிவி குறைபாடு

கடந்த சில ஆண்டுகள் வரை விபத்து உள்ளிட்ட பலவகை குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரே ஆயுதமாக சிசிடிவி கேமிராக்கள் இருந்தனர். தற்போது மக்கள்தொகை பரவியப் பகுதிகளிலும் அவை அதிகரிக்கப்படவில்லை எனக் கருதப்படுகிறது. அதேபோல், பழுதடைந்த சிசிடிவிகளும் முறையாக சரிசெய்து பராமரிக்கப்படவும் இல்லை எனவும் ஒரு கருத்து உள்ளது.

இதே சிசிடிவி பல்லடம் சம்பவம் பகுதியில் இல்லாததும் அதன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மேலும், தற்போது தமிழகத்தில் பல லட்சம் எண்ணிக்கையில் வட மாநிலத்தவர்கள் பெருகி விட்டனர். இவர்கள் இடையே பாவரியாக்களை அடையாளம் கண்டு கைது செய்வதும் தமிழகப் போலீஸாருக்கு பெரும் சவாலாகவே அமைந்து விட்டது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE