சென்னை: பைக்கில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாலவாக்கம், காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் பிலிப்ஸ் ராபர்ட்ஸ் (30). கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிகிறார். இவர் கடந்த 2-ம் தேதி மதியம், வேலை முடித்து, திருவான்மியூர், ஜெயந்தி சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞர்கள் இருவர், பிலிப்ஸின் வாகனத்தை மறித்து லிப்ட் கேட்டனர்.
இறக்கப்பட்ட அவர், இருவரையும் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டார். பின்னர் சிறிது தூரத்தில் டைடல் பார்க் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி, இரு இளைஞர்களும் பிலிப்ஸை திடீரென தாக்கினர். கத்தி முனையில் மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
பிலிப்ஸ் இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி அக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், செயின் பறிப்பில் ஈடுபட்டது ஆவடி கன்னிகாபுரம் கலைமணி (23), கண்ணகி நகர் மாதவன் (20) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த இவர்களை கைது செய்த போலீஸார் உடந்தையாக இருந்ததாக 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். பின்னர், அவரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
விசாரணையில், கைதான கலைமணி மற்றும் மாதவன் ஆகிய இருவர் மீதும் ஏற்கெனவே எழும்பூர் மற்றும் கடற்கரை, ரயில்வே காவல் நிலையத்தில் தலா ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
» எழுத்தாளர், தேசிய விருது இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்
» கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 2 பேர் உயிரிழப்பு: 24 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை