பெரம்பலூர் அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த சொகுசு பஸ் எரிந்து முற்றிலும் சேதம்

By அ.சாதிக் பாட்சா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அய்யப்ப பக்தர்கள் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

ஆந்திர மாநிலம், விஜயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 9 பெண்கள் உள்பட 40 பேர் ஒரு சொகுசுப் பேருந்தில் சபரிமலைக்கு சென்றனர். சபரிமலையில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பேருந்தை ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாக பூஷணம் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை பெரம்பலூர் அருகே வந்த போது பேருந்தை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் கரடி முனீஸ்வரர் கோயில் அருகே ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தனர்.

சிலர் பேருந்தின் உள்ளே சமையல் கேஸ் சிலிண்டர் மூலம் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீ பேருந்தினுள் பரவி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பேருந்து வேகமாக தீ பரவ தொடங்கியது. பேருந்தினுள் இருந்தவர்கள் அலறியடுத்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கியதால் உயிர்தப்பினர். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பெரம்பலூர், வேப்பூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 3 வாகனங்களில் வந்த 25 தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் பேருந்து முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது. விபத்தில் அய்யப்ப பக்தர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விழுப்புரத்தில் வெள்ள மீட்புப் பணிக்குச் சென்றுவிட்டு பெரம்பலூர் வந்து கொண்டிருந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் தீயை அணைக்கும் பணியை மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். மேலும், விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE