கரூர்: அய்யர்மலையில் உள்ள கிரீஸ்வரர் கோயிலுக்கு படியேறிச் சென்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேலதாளியம்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி (47). இவர் மகன் சதீஷ் (22). கார்த்திகை சோம வாரத்தையொட்டி அய்யர்மலையில் மலைமேல் உள்ள ரத்தின கிரீஸ்வரர் கோயிலுக்கு செல்ல அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கோயிலுக்கு படியேறி சென்றுள்ளார். 100 கல் மண்டபம் அருகே செல்லும்போது திடீரென சதீஷ் மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் நண்பர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அதே மருத்துவமனையில் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.