மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள் - திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள், திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல வெளிநாடுகள், இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்தும் திருச்சி விமான நிலையத்துக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வருவதை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியா தலைநகர் கோலாம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் இன்று வந்தது. விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளின் உடமைகளை வழக்கம் போல சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் பயணித்த ஆண் பயணியின் உடமைகளை சோதித்தபோது, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டு வரப்பட்ட உயிருடன் கூடிய 55 பல்லிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நுண்ணிறிவுப்பிரிவு அலுவலர்கள் மாவட்ட வன அலவலர் கிருத்திகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்ட வனத்துறை அவற்றை ஆய்வு செய்துவிட்டு, ‘அந்த பல்லிகள் இந்திய நாட்டைச் சேர்ந்தவை அல்ல. மேலும் வெளிநாடுகளிலிருந்து விலங்கினங்களை கொண்டு வரும் உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை’ எனக்கூறி சுங்கத்துறைக்கு அவற்றை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப கடிதம் வழங்கி உள்ளது.

இது குறித்து வனத்துறை வட்டாரங்களில் கூறியது: இந்தப் பல்லிகள் எதற்காக கொண்டு வரப்பட்டது என தெரியவில்லை. திருச்சி வழியாக வேறு மாநிலங்களுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ கொண்டு செல்ல முயற்சித்திருக்கலாம். வன விலங்கு சட்டப்படி முறையான அனுமதி பெற்று அந்தப் பல்லிகள் இங்கு கொண்டுவரப்படவில்லை. இதுதொடர்பாக சுங்கத்துறையினர் தான் பதிலளிக்க வேண்டும்’ என்றனர்.

மவுனம் கலையுமா சுங்கத்துறை? - ஆனால் சுங்கத்துறை அலுவலர்கள் வழக்கம்போல பிடிபடும் தங்கம், வன விலங்குகள் போன்ற விவரங்களை பதிவிடுவதோடு சரி, அதன்பிறகு கடத்தலில் ஈடுபட்டவர்கள் பெயரோ, அவர்களது புகைப்படங்களையோ, அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தோ எந்த தகவலும் தெரிவிப்பதும் இல்லை. ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிடுவதுமில்லை.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டாலும் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடைபெற்று வருவகிறது என்று பூசிமொழுகுவதோடு சரி அதுதொடர்பான தகவல்களை முழுமையாக தெரிவிப்பதில்லை. தங்களைப் பற்றி எந்தத் தகவலும் வெளியே தெரியாததால் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு இதுவே பெரிய வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது.

இதுவே கடத்தலைக் கட்டுப்படுத்த முடியாததற்கு மிகப்பெரும் காரணமாக அமைந்துள்ளது. எனவே திருச்சி சுங்கத்துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற கடத்தல்காரர்களுக்கு சவுக்கடியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE