பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு பெண் செவிலியர் ஒருவர் அங்குள்ள கழிப்பறைக்குச் சென்றபோது, கழிப்பறையை சுத்தம் செய்யும் பிரஷ்-ல் ரப்பர் பேண்ட் சுத்தப்பட்ட நிலையில் ரகசிய பேனா கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கடந்த 28-ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக காவல் உதவி கண்காணிப்பாளர் சிரிஷ்டி சிங் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வரும் வெங்கடேஷ்(33) என்பவருக்கு இதில் தொடர்புள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன், மெமரி கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த மருத்துவர் வெங்கடேஷ், தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எஸ். ஆர்த்தோ பயின்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக பயிற்சி பெற்று வந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
» டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது: காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு