மதுரை: மதுரையில் 1999-ல் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிதி நிறுவன மோசடி வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.24.40 லட்சம் அபராதம் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் கடந்த 1990 முதல் 1999 வரை கே.ஆர்.சுதர்சன் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. சிறு சேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் திரும்ப தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். ஆனால் சொன்னபடி பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதையடுத்து 550 பேரிடம் ரூ.8.5 கோடி வசூலித்து வட்டியுடன் சேர்த்து ரூ.14 கோடி வரை மோசடி செய்ததாக 1999-ல் மகாலெட்சுமி என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சிறு சேமிப்பு திட்டம் நடத்தியவர்கள், முகவர்கள் என 17 பேர் மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பல்வேறு கட்டங்களாக அரசு முடக்கியது. இயக்குனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் வழக்கில் சேர்க்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை டான்பிட் (நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பு சாட்சியாக 363 பேர் விசாரிக்கப்பட்டனர்.
போலீஸார் 708 ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக 363 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் நிதி நிறுவனத்திடம் இருந்து 708 ஆவணங்கள் போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
» புயலை எதிர்கொள்ள அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
» டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதலா? - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
விசாரணை நிலுவையில் இருந்த போது சிறுசேமிப்பு திட்ட இயக்குநர்களில் 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜோதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் முகமது இஸ்மாயில் வாதிட்டார். விசாரணை முடிந்த நிலையில், வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சுப்பிரமணியனுக்கு (74) 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.24.40 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.