காதலியை மிரட்ட தூக்கிட்ட மதுரை ஐடி ஊழியர் உயிரிழந்த பரிதாபம்

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் காதலியை மிரட்டுவதற்காக தூக்கிட்ட கேரளாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழா புலின்குன்னு காயல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், சவுதி அரேபியாவில் வேலை செய்கிறார். இவரது மகன் அருண் விஜய் (21). இவர் பிளஸ்-டூ படித்துவிட்டு, மதுரை பாண்டிக்கோயில் பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வேலை பார்த்துக்கொண்டே மதுரையில் தங்கி பிசிஏ. 2-ம் ஆண்டு படித்தார். இந்நிலையில், அருண் விஜய் கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்தார்.

அவரும் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்த நிலையில், இருவீட்டாரும் திருமணத்து ஒத்துக்கொண்டதால் நிச்சயதார்த்தமும் ஜூனில் முடிந்தது.தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிக் கொண்டு வந்துள்ளனர்.

2 நாளுக்கு முன்பு வீடியோ காலில் பேசி உள்ளனர். அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் இணைப்பை துண்டித்த நிலையில், சிறிது நேரத்தில் ஐஸ்வர்யாவை அருண்விஜய் தொடர்பு கொண்டுள்ளார் அவர் போனை எடுக்காத சூழலில் அவரை மிரட்டுவதற்காக தற்கொலைக்கு முயற்சிப்பதாக குறுந்தகவல் அனுப்பி அருண்விஜய் நாடகமாடி உள்ளார்.

இது குறித்த தகவலை தெரிந்த ஐஸ்வர்யா அருண் விஜய்யுடன் அறையில் தங்கி இருக்கும் நண்பர்களுக்கு தெரிவித்தார். அவரது நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, அருண் விஜய் தூக்கில் தொங்கியது தெரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி போலீசார் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருப்பினும், அவர் வழியில் உயிரிழந்தது தெரியவந்தது. எதிர்கால மனைவியை பயமுறுத்த தூக்கிட்ட ஐடி ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுத்தாவணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE