ராமேசுவரம்: கிரைண்டர் ஆஃப் மூலம் தொடரும் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிரைண்டர் (Grindr) ஒரு டேட்டிங் செயலி (Dating App) ஆகும். இந்த செயலியின் மூலம் பயனர் தாம் வாழும் பகுதியில் தங்கள் பாலின தேர்வுக்கேற்ப ஒரு துணையைத் தேடிக்கொள்ள முடியும். உலகளவில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இந்த செயலி உள்ளது. இந்த செயலியை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த செயலியைப் பயன்படுத்தி தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக வலைதளம் மற்றும் இதற்கென பிரத்தியேகமாக உள்ள கிரைண்டர் (Grindr) செயலிகளில் ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களின் புகைப் படங்களைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் தங்களைத் தனிமையில் சந்திப்பதாகக் கூறி மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அழைத்து உங்களிடம் உள்ள பணம் மற்றும் உடைமைகளைப் பறித்துச் செல்லும் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கிரைண்டர் செயலி மற்றும் அதைப் போன்று வேறு செயலிகளை பயன்படுத்தி மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் குறித்து 24 மணி நேர உபயோகத்தில் உள்ள ஹலோ போலீஸ உதவி எண் 83000 - 31100 அல்லது மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 100-ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.