திருப்பூரில் 3 பேர் கொடூரக் கொலை - குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

By KU BUREAU

திருப்பூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வ சிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக, செந்தில்குமார் நேற்று சேமலைகவுண்டம்பாளையத்துக்கு வந்துள்ளார். நேற்றிரவு தாய், தந்தையுடன் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை கத்தியால் குத்தி, இரும்புராடால் அடித்து கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரது மனைவி அலமேலு மற்றும் மகன் செந்தில்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர்.

இன்று அதிகாலை வீட்டுக்குள் சென்று சிலர் பார்த்தபோது மூவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவிநாசிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில் வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, “பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 முதல் 7 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தை கொண்டு மூவரையும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE