‘பாபநாசம்’ பட பாணியில் ஆவடி கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி: பாபநாசம் திரைப்பட பாணியில் ஆவடியில் பூக்கடை ஊழியரை கொன்று வீட்டில் புதைத்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி-கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆவடி - காமராஜர் நகர், ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (36). பூக்கடை ஊழியரான இவருக்கும், ஆவடி- கவுரிபேட்டை பகுதியை சேர்ந்த அமுதா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தவறான உறவு இருந்துள்ளது. இந்நிலையில், சுந்தரத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகிய அமுதா, கவுரிபேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான திவான் முகமதுடன் பழகி வந்துள்ளார். ஆகவே, சுந்தரத்துக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, சுந்தரத்தை கொலை செய்ய திட்டமிட்ட திவான் முகமது, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தன் வீட்டுக்கு சுந்தரத்தை வரவழைத்து, கொலை செய்து பள்ளம் தோண்டி புதைத்தார். பாபநாசம் திரைப்பட பாணியில் சுந்தரம் கொலை செய்யப்பட்டு, பள்ளம் தோண்டி வீட்டிலேயே புதைக்கப்பட்ட இச்சம்பவம் குறித்து ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திவான் முகமது, அவரது நண்பர் கோபி, அமுதா, அவரின் உறவினர் ராஜேஸ்வரி, அமுதா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி - கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் புரட்சிதாசன் வாதாடினார். வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, பூந்தமல்லி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் இன்று தீர்ப்பு அளித்தார். அதன்படி, ”சுந்தரத்தை கொலை செய்த குற்றத்துக்காக திவான் முகமதுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் இந்த கொலை வழக்கில் கோபி, அமுதா, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை விடுதலை செய்தார். அதுமட்டுமல்லாமல், கொலை செய்யப்பட்ட சுந்ரத்தின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE