போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் கைது

By KU BUREAU

சென்னை: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச இளைஞர், சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

விமானத்தில் பயணிக்க வந்தவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் பிளாஸ் டாலி (31) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆண் பயணி ஒருவர் மலேசியா செல்ல வந்தார்.

அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அது போலி என தெரியவந்ததால் அவரது பயணத்தைரத்து செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.

வங்கதேசத்தை சேர்ந்த அவர், இந்திய எல்லைக்குள் ரகசியமாக ஊடுருவி, மேற்குவங்க மாநிலத்தில் சில மாதங்கள் தங்கியிருந்துள்ளார். அப்போது கொல்கத்தா முகவரியில் போலி பாஸ்போர்ட் பெற்று, ரயில் மூலம் சென்னை வந்துள்ளார்.

தற்போது அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE