மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கர்ப்பிணிப் பெண் ஆக்ஸிஜன் வசதி இல்லாத ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இன்று உயிரிழந்தார்.
சர்னி கிராமத்தில் வசிக்கும் பிங்கி டோங்கர்கர், பிரசவ வலியால் அவதிப்பட்டு, நேற்று மாலை ஆபத்தான நிலையில் காசா கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரது மோசமான உடல்நிலை காரணமாக, மருத்துவர்கள் அவரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள சில்வாசா நகரத்திற்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
இருப்பினும் 108 அவசர சேவை மூலம் ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்ய அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. இறுதியில், அவர்கள் வழக்கமான ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு சில்வாசாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனையடுத்து டோங்கர்கர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார், அவரது கருவும் உயிர் பிழைக்கவில்லை.
பல்கரின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராம்தாஸ் மரட் கூறுகையில், “இப்பகுதியில் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் இல்லாதது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை பிரச்சினைகளை எழுப்பியுள்ளோம். ஆனால் நிறைவேறவில்லை. டோங்கர்கர் கருப்பையில் கரு மரணம் (IUFD) எனப்படும் ஒரு நிலையில் அவதிப்பட்டார். கரு மரணத்தின் சரியான நேரத்தை தீர்மானிக்க முடியவில்லை. அவர் முதலில் காசா கிராமப்புற மருத்துவமனைக்கு வந்தபோது, அவர் அரை மயக்கத்தில் இருந்தார் மற்றும் கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறிகள் தெரிந்தது” என்றார்
» ‘மாவீரம் போற்றுதும்’ - தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபரப்பு பதிவு!
» ஏற்காடு, மலை கிராமங்களில் கடும் பனிப்பொழிவு - காபி செடிகளில் பழங்கள் பழுப்பது பாதிப்பு
இதுபற்றி பேசிய பால்கர் பாஜக எம்பி டாக்டர் ஹேமந்த் சவாரா, “சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுத்து ஆம்புலன்ஸ் சேவைகள் தேவையான வசதிகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்
இதுபற்றி பேசிய சிபிஐ(எம்) தலைவர் வினோத் நிகோல், “கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் அலட்சியம் காட்டுகிறது. கிராமப்புறங்களில் அவசர சுகாதார தேவைகளை விட லட்கி பஹின் யோஜனா போன்ற பிற திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது” என குற்றம் சாட்டினார்.