அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவர் உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவர் கடந்த 35 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்தார். இந்நிலையில், தனது மனைவி மாலதி (50), மகன் விக்னேஷ் (30), மருமகள் ஜெயலட்சுமி (26) ஆகியோருடன் அரியலூர் மாவட்டம் கடம்பூருக்கு நேற்று காரில் வந்துள்ளார். அங்கு கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, கடம்பூரில் உள்ள தனது மகள் புனிதவள்ளியின் குழந்தைகள் தினேஷ் (8), சகானா (6) ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு இன்று புறப்பட்டுள்ளார்.
கார் திருமானூர் அருகே உள்ள சத்திரத்தேரி பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை இயக்கிய செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்னேஷ் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த மாலதி, ஜெயலட்சுமி, தினேஷ், சகானா ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.