புதுச்சேரி: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 67 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பிரியதர்ஷினி நகர், கே.டி.தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற குருராஜ் (67). இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தோணி மீது ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்தோணி மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்தோணி என்ற குருராஜுக்கு போக்சோ சட்டம் 6வது பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அந்தோணி என்ற குருராஜ் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE