சென்னை: ‘பிஎம் கிசான் யோஜனா’ திட்டத்தின் பெயரைவைத்து ‘பிஎம் கிசான் யோஜனா’ என்ற பெயரில் போலியான ‘ஆப்’ ஒன்றை மோசடி பேர்வழிகள் தயாரித்துள்ளனர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்பையும் அப்படியே அபகரித்துக் கொள்ளும் மோசடி, தமிழகத்தில் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பிஎம் கிசான் யோஜனா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் விவசாயிகள் தங்களது விவசாய பணியை மேற்கொள்ள ஆண்டுக்கு 6,000 ஆயிரம் ரூபாய் மானியத் தொகை, மூன்று தவணைகளாக அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மத்திய அரசின் ‘பிஎம் கிசான் யோஜனா’ திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். தகுதியுள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தால், அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த மானியத் தொகையை மட்டுமின்றி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்பையும் அப்படியே அபகரித்துக் கொள்ளும் மோசடி, தமிழகத்தில் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
» கடலூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி: திமுகவினர் உற்சாக வரவேற்பு
» கடந்த 10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு: வெளியான ஷாக் தகவல்
‘பிஎம் கிசான் யோஜனா’ திட்டத்தின் பெயரைவைத்து ‘பிஎம் கிசான் யோஜனா’ என்ற பெயரில் போலியான ‘ஆப்’ ஒன்றை மோசடி பேர்வழிகள் தயாரித்து வெளியிட்டுள்ளனர். மத்திய அரசின் மானியம் பெற இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கூறி, அந்த செயலி மூலம் அப்பாவி விவசாயிகள் சிலரின் ‘கூகுள் பே’ கணக்கில் இருந்து பணத்தை அபகரித்துள்ள அதிர்ச்சிகரமான மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.
அதிகம் படிக்காத ஏழை, எளிய விவசாயிகளை குறிவைத்து விவசாய மானியம் தருகிறோம் என்று ஆசைகாட்டி இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு நலத்திட்டங்களின் பெயரில் இதுபோன்ற மோசடி செயலிகளை உருவாக்குவது மிகவும் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். மாநில அரசுகளின் பெண்களுக்கான மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை பயன்படுத்தியும் ஆங்காங்கே மோசடிகள் நடைபெறுவது அவ்வப்போது செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மோசடி செயலிகளை உண்மை என நம்பி பணத்தை ஏமாறும் செயல் ஒருபுறம் நடந்தாலும், அரசின் உண்மையான திட்டங்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கவே யோசிக்கும் நிலையையும், மத்திய அரசின் விண்ணப்பங்களை சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
இத்தகைய போக்கு நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. அரசு திட்டங்களின் பெயரில் நடைபெறும் மோசடிகளை அரசு அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இணையதளங்கள் 90-களில் வளர்ச்சியடைய தொடங்கியபோது, இதேபோன்ற பிரச்சினைகளை அரசு நிறுவனங்கள் சந்தித்தன. அரசு நிறுவனங்களின் இணையதளங்கள் எது, தனியார் நிறுவனங்களின் இணையதளங்கள் எது என்று வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை இருந்ததால், அதை பயன்படுத்தி பல ஏமாற்று வேலைகளும் அரங்கேறின.
அப்போது அரசு சுதாரித்துக் கொண்டு, தேசிய அளவில் தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கி, ‘nic.in, gov.in’ போன்ற அடைமொழிகளுடன் முடிந்தால் அரசு அமைப்புகள் என்று எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்தியது.
மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் இரண்டு எழுத்துக்களுடன் ‘gov.in’ என்ற அடைமொழி வரும்போது அது மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்று புரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி தந்தது. இதன்பிறகு, ஏமாற்று வேலைகள் கட்டுக்குள் வந்தன.
கைபேசி செயலிகள் மூலம் தற்போது பல பணிகள் நடந்துவரும் நிலையில், தாமதிக்காமல் அரசு அமைப்புகளின் செயலிகளுக்கும், தனியார் அமைப்புகளின் செயலிகளுக்கும் வேறுபாடு இருக்கும் வகையில், ஏதாவது ஓர் அம்சத்தை அரசு கொண்டுவர வேண்டும். இதை உடனே செய்தால் மட்டுமே ஏழை எளிய மக்களை இன்றைய காலகட்டத்தில் மோசடிகளில் இருந்து காப்பாற்ற முடியும் என்று பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
அதேவேளையில், மக்களும் விழிப்புடன் செயல்படுவது மிக முக்கியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிகாரபூர்வமற்ற ஆப்-களை பதிவிறக்கம் செய்வதோ, நம்பகமான பெயரைத் தாங்கிக் கொண்டு வரும் குறுந்தகவல்களின் இணைப்புகளை க்ளிக் செய்வதோ கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
‘பிஎம் கிசான் யோஜனா’ போலி செயலி குறித்து தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கூறும்போது, “பிஎம் கிசான் யோஜனா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மோசடி செயலியானது, வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இதன்மூலம், பயனாளிகளின் எஸ்எம்எஸ் பயன்பாட்டையும், செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் இயக்கங்களையும் கட்டுப்படுத்தி, அதில் உள்ள தரவுகளை சேகரித்து, யுபிஐ செயலிகள் மூலம் மோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறியிருப்பதை குறித்துக்கொள்ள வேண்டும்.