தஞ்சாவூரில் 330 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு: குற்றவாளி வீட்டில் ரூ.37.50 லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்தபோது, போலீஸாரிடம் சிக்கிய 330 கிலோ கஞ்சா வழக்கில் முக்கிய குற்றவாளியான தஞ்சாவூர் கருப்பையா மற்றும் அவரது உறவினர் ரகுநாதன் ஆகியோர் வீட்டில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கின.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்– இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீஸார் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியில், போலீஸார் ரோந்து சென்ற போது, அங்கிருந்த பாலத்தில் லாரியில் இருந்து, பெரிய பெரிய பொட்டலங்களை மூன்று பேர் காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

இதனால் சந்தேமடைந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில், சுமார் 330 கிலோ அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீஸார் லாரி டிரைவரான, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுார் ஊத்துமலையை சேர்ந்த பெரமராஜ் (34), பேராவூரணி அருகே காரங்குடா பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா (60) ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில், தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா (52) என்பவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே அனகப்பள்ளி பகுதியில் கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கை கடத்த திட்டமிட்டதும், இதற்கு, தனது நண்பரான அண்ணாதுரை (44) என்பவருக்கு சொந்தமான படகை ஏற்பாடு செய்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 330 கிலோ கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அண்ணாதுரைக்கு சொந்தமான 3 படகுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கருப்பையா தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., ஷனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் கஞ்சா கடத்தல் கும்பலிடம் பல பணி நேரம் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள கருப்பையா மற்றும் தஞ்சாவூர் அருகே புதுப்பட்டினம், தில்லைநகரில் உள்ள அவரது உறவினர் ரகுநாதன் ஆகியோர் வீடுகளில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீஸார் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பலமணிநேரம் நடந்த இந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து ரூ.37.50 லட்சம் பணம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE