புதுச்சேரி: கஸ்டம்சில் பிடிபடுகின்ற செல்போன், டிவி, மைக்ரோஓவன், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை பாதி விலைக்கு கொடுக்கிறேன் என்று வாட்ஸ் அப்பில் விளம்பரம் செய்து ரூ. 9 லட்சத்து 15 ஆயிரம் ஏமாற்றிய கோட்டகுப்பம் நபரை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
முதலியார் பேட்டை சேர்ந்த தனியார் ஊழியர் ராஜா என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் கஸ்டம்ஸில் கிடைக்கின்ற பொருட்களை பாதி விலைக்கு கொடுக்கின்றோம் என்று வந்த பதிவை நம்பி மேற்கண்ட நபரை தொடர்பு கொள்கிறார். அவரும் வாட்ஸ்அப்பிலேயே செல்போன் டிவி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் போன்ற பொருள்கள் அனைத்துமே எங்களிடம் இருக்கிறது மார்க்கெட் மதிப்பிலிருந்து பாதி விலைக்கு புதிய பொருளை உங்களுக்கு கொடுக்கிறோம் என்று சொன்னதை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ. 9,15,750 பணத்தை மோசடிகாரர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் ஆப்பிள் ஐபோன், செல்போன்கள், டிவி ,பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை அவருக்கு வாட்ஸ் அப் மூலமாக பகிர்ந்து வந்தார்.
எனவே மேற்கூறிய பொருட்களின் விலையை கடையில் சென்று விசாரிக்கும் பொழுது 20 ஆயிரம் ரூபாய் என்கிற பொருளுக்கு 10,000 ரூபாய் மட்டுமே பணத்தை கேட்பதால் புதிய பொருள் பாதி விலைக்கு வருகிறது என நம்பி இவ்வளவு பணத்தையும் செலுத்தி விட்டு மேற்படி நபரை தொடர்பு கொண்டபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்அப் செயல்படவில்லை. அவர் அளித்த தகவல்படி கோட்டகுப்பம், புதுக்குப்பம் பகுதி ரவுண்டானாவிற்கு அருகில் வசிக்கும் அப்துல் சாஹித் என்ற அருண் பிரசாத் என்பதை தவிர வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்பதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைமில் ராஜா புகார் தந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
» அவமதிப்பு தொடர்வதால் அரசு விழாக்கள் புறக்கணிப்பு: ஏனாம் சுயேட்சை எம்எல்ஏ அறிவிப்பு
» புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு: மருத்துவமனையில் நீதிபதி விசாரணை
சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், "இணைய வழியில் வருகின்ற வேலை வாய்ப்பு. குறைந்த விலை பொருட்கள், வீட்டிலிருந்து வேலை போன்றவற்றில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்" என எச்சரித்தனர்.