புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு: மருத்துவமனையில் நீதிபதி விசாரணை

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போதை ஊசி பயன்படுத்தியது தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதிபதி ஞாயிற்றுக்கிழமை (நவ.24) விசாரணை மேற்கொண்டார்.

புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் நவ.22-ம் தேதி அங்கு விசாரணை நடத்தினர். அதில், புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 7-ம் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஸ்வரன் (36) உட்பட 13 பேரை பிடித்து நகரக் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர். அங்கு அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காவல் நிலைய விசாரணையின்போது விக்னேஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் அழைத்து செல்லப்பட்டார். விக்னேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக விக்னேஸ்வரனின் உடல் வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸாரின் விசாரணையில் இருந்தபோது விக்னேஸ்வரன் உயிரிழந்ததாக நகரக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரனின் உடலை புதுக்கோட்டை குற்றவியல் நீதிபதி (பொ) ஏ.விஜயபாரதி ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து, உடலில் காயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தார். மேலும், சந்தேகிக்கும் சில இடங்களில் உள்காயம் இருக்கிறதா என டிஜிட்டல் எக்ஸ்ரே கொண்டு வரச் செய்து, எக்ஸ்ரே எடுத்தும் ஆய்வு செய்தார். விக்னேஸ்வரனின் பெற்றோர், போலீஸார் ஆகியோரிடம் நீதிபதி விஜயபாரதி தனித்தனியே விசாரித்து வாக்கு மூலம் பெற்றார்.

பின்னர், விக்னேஸ்வரனின் உடல் பிரேத பரசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை இருக்கும் என கூறப்படுகிறது. போலீஸ் காவலில் இருந்தவர் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE