கோவை: கோவையில் இருவேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை இருகூர் அருகேயுள்ள, சிந்தாமணிபுதூரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (54). இவர், காமாட்சிபுரம் பகுதியில் சொந்தமாக பேக்கிரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு, வியாபாரம் முடிந்தவுடன் ரமேஷ் பேக்கிரியை மூடிவிட்டு, கதவருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர், ரமேஷ் குமாரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிங்காநல்லூர் போலீஸார் கடந்த 22ம் தேதி தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்களுக்கு செல்போன் பறிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த தீபக் அமர்நாத் (26), விக்னேஷ்வரன் (25), ஆல்வின் பில்கேட்ஸ் (26), கோபிநாத் (25), அஜய் (24) ஆகியோர் எனத் தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
மேலும், கடந்த 19ம் தேதி சேரன் மாநகர் பகுதியில் வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.
» தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு
» திருத்துறைப்பூண்டியில் புதுமண தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை - போலீஸார் விசாரணை
அதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார். இவர், கடந்த 22ம் தேதி வேலை விஷயமாக, அன்னூர் அருகே மாணிக்கம்பாளையம் பகுதிக்கு வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கிரிக்கு அஜீத்குமார் சென்று டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் அங்கு வந்த நால்வர், கத்தியை காட்டி மிரட்டி, அஜீத்குமாரிடம் இருந்த 6 பவுன் நகையை பறித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீஸார் விசாரி்த்தனர். அதில், நகையை பறித்துச் சென்றவர்கள் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் (24), திவாகர் (19), முகேஷ்வரன் (19), தமிழ்செல்வன் (20) ஆகியோர் எனத் தெரிந்தது. இதையடுத்து நால்வரையும் போலீஸார் நேற்று (நவ.23) கைது செய்து, சிறையில் அடைத்தனர்.