திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் உதய பிரகாஷ் (23). இவர் நாகப்பட்டினம் மாவட்டம் நீடூரை சேர்ந்த ஹேமா (21) என்பவரை கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்துக்கு ஹேமாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணத்துக்கு பின்னர் உதய பிரகாஷ், ஹேமாவுடன் ஆட்டூரில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், ஹேமா அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையிலும், பிரகாஷ் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கிட்டு நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருமணமான ஒரு சில நாட்களிலேயே பிரகாஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை ஹேமா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு நிகழ்ந்து வந்த நிலையில், நேற்று இரவும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு, ஹேமா வீட்டுக்குள் தூக்கிட்டு கொண்டார்.
அதன் பின்னர் பிரகாஷ் வீட்டு வாசலில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டுள்ளார் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
» சென்னை | உணவு டெலிவரி செயலி மூலம் போதை பொருள் விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது
» சென்னை | ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ கஞ்சா பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த பெண் கைது
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.