ராமநாதபுரம் அருகே பாலத்தில் கார் மோதி விபத்து - திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சிறிய பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில், திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருடாமுத்தூர் வி.வடமலைபாளையத்தைச் சேர்ந்த சுப்பராயன் மகன் சண்முகசுந்தரம்(45), இவரது உறவினர் விசுவநாதன் மகன் தீபக் அரவிந்த்(26) மற்றும் நாகராஜன்(36), ராமசாமி மகன் கார்த்திகேயன்(33) ஆகியோர், நேற்று (நவ.22) ஒரு காரில் ராமேசுவரம் வந்தனர். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு இன்று (நவ.23) பகல் 12 மணியளவில் ராமேசுவரத்திலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் அருகே இடையர்வலசை கிராம பகுதியில் சாலையோரம் இருந்த சிறிய பாலத்தில் கார் திடீரென மோதியது. இதில் சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தீபக் அரவிந்த், நாகராஜ், கார்த்திகேயன் ஆகிய மூவரும், ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் அரவிந்த், நாகராஜன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த தீபக் அரவிந்த் மற்றும் நாகராஜன்

படுகாயமடைந்த கார்த்திகேயன் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்த 3 பேரின் உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் தங்களது ஊரில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, புனித நீர் எடுத்துச் செல்லும்போது விபத்தில் சிக்கினர்.

விபத்து நடந்ததும் பஜார் போலீஸார் மற்றும் ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் காருக்குள் சிக்கிக் கொண்ட காரை ஓட்டி வந்த கார்த்திகேயனை தீயணைப்புத் துறையினர் சிரமப்பட்டு மீட்டனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நாகராஜன், இந்து முன்னணி நிர்வாகி எனவும், காயமடைந்த கார்த்திகேயன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியத்தின் உறவினர் எனவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE