வேல்ராம்பட்டில் 40 ஆண்டாக ஆக்கிரமிப்பில் 11.5 ஏக்கர் நிலம் மீட்பு!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வேல்ராம்பட்டில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் தேவஸ்தானத்துக்கு சொந்தமான 11.5 ஏக்கர் நிலம் வருவாய்த்துறையால் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கும் என தெரிகிறது.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகேயுள்ளது வீராம்பட்டிணம். இங்குள்ள ஸ்ரீ செங்கழுநீரம்மன் தேவஸ்தானத்துக்கு முதலியார்பேட்டை வேல்ராம் பட்டில் 11.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதை குத்தகை அடிப்படையில் தனியாரால் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. கோயில் தேவஸ்தானம் நிலத்தை ஒப்படைக்கக் கோரிய நிலையில், அதை அனுபவித்தவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் கோயில் தேவஸ்தானத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.

அதனடிப்படையில் நிலத்தை மீட்கும் நடவடிக்கை இன்று நடைபெற்றது. அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் வருவாய்த் துறை வட்டாட்சியர் பிரித்வி ராஜ் கோயில் தனி அதிகாரி சுரேஷ், வீராம்பட்டிணம் மக்கள் குழு அமைப்பினர் என ஏராளமானோர் சென்று நிலம் மீட்கப்பட்டு சீலிடப்பட்டது.

அந்த இடத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதை குறிக்கும் அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டன. மீட்கப்பட்ட கோயில் நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE