ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தராயன்குளத்தை சேர்ந்த பாலையா மகன் பாலகிருஷ்ணன் (52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 14ம் தேதி செங்கோட்டை - போடி வழித்தடத்தில் அரசு பேருந்தை ஓட்டி சென்றார். அப்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் சென்றபோது, பைக் மீது மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டிற்கு வந்த பாலகிருஷ்ணன், இத்தனை ஆண்டுகால பணியில் ஒரு விபத்து கூட ஏற்படுத்தியது இல்லை. ஆனால் தற்போது விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக கூறி வீட்டில் புலம்பி வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.
மன உளைச்சலில் இருந்த பாலகிருஷ்ணன் 15ம் தேதி காலை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.