இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 9 பேர் கைது

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: குளத்தூர் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகள் மற்றும் அரசு மானிய யூரியா மூட்டைகளை வாங்கி தனியார் கடைகள் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்ற 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான கிட்டங்கி குளத்தூர் அருகே தளவாய்புரம் கிராமத்தில் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் நேற்று இரவு வேளாண்மைத் துறை ஓட்டப்பிடாரம் வட்டார உர ஆய்வாளர் சிவகாமி, குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) உமா தேவி மற்றும் போலீஸார் ஜெயக்குமாருக்கு சொந்தமான கிட்டங்கிக்கு சென்று சோதனையிட்டனர்.

அங்கு சிலர் அரசு மானிய முத்திரை கொண்ட மஞ்சள் நிற சாக்கு பைகளில் இருந்த யூரியாவை பிரித்து வேறு சாக்கு பைகளில் மாற்றி, அதனை, தனியார் உரக்கடைகளுக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். மேலும், அந்த கிட்டங்கியில் பீடி இலை பண்டல்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், மதுரை பகுதியில் இருந்து விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் யூரியா மூட்டைகளை வாங்கி வந்து, அதனை வேறு மூட்டைகளுக்கு மாற்றி தனியார் உரக்கடைகள் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து கிட்டங்கியில் இருந்து 299 யூரியா மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும். இதேபோல், தலா 60 கிலோ கொண்ட 40 பண்டல் பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.20 லட்சமாகும்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், கிட்டங்கியில் உரம் மற்றும் பீடி இலைகளை பதுக்கி வைத்த திண்டுக்கல் மாவட்டம் நாகர் நகரை சேர்ந்த கார்த்திக் (39), திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த சைய்யதலி (35), புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த அசன்பாஷா (50), தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (35), அரவிந்த் (22), சிலுவைப்பட்டியை சேர்ந்த முருகேசன் (43), மேலூரைச் சேர்ந்த அந்தோணி கார்த்திக் (27), கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (24), கனிராஜ் (42) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர்.

மேலும், கிட்டங்கி உரிமையாளர், லாரி உரிமையாளர்கள் என 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE